காதல் - பாரதி கண்ணம்மா



பாரதி கண்ணம்மா

நல்லதோர் காதல் கொண்டேன் - அதை
       நான் உனக்கு சொல்ல வருவேன்
சொல்லடி என் கண்ணம்மா - அந்த
   சுடர்மிகு சோதியை அணைத்திடுவாயோ

காற்றடை பந்தினை கண்ணம்மா - இன்னும்
       எத்தனை நாழி புனலினுள் அடைப்பேன்
சிற்றிடை கலைமகளே நீ - என்றன்
      ஜீவனில் பாதி கொண்டாய்

தீயினுள் வளர் சாம்பலாய் - நின்றன்
      பார்வையினால் பெற்ற காதலாம்
பாயினில் படுத்திருந்தும் - எந்தன்
      தூக்கத்தை தேடிடும் பாவியடி

சுருட்டிய கூந்தலுக்குள் - கண்ணம்மா
     சுகமாய் நான் சரண் புகுவேன் - நீ
உருட்டிடும் கருவிழி மை கொண்டு
  நான் ஓராயிரம் கவி புனைவேன்

உலகத்தின் தலைமை இன்பம் - ஆண்
      பெண் காதல் என்றான் பாரதி
கலக்கதை இனி விடுத்து - என்றன்
      காதலில் சேர்ந்திடுவாய் கண்ணம்மா
- சிவதத்துவ சிவம்

தத்துவம் - நெகிழி வாழ்க்கை



நெகிழி வாழ்க்கை

கதாநாயகனாக, வில்லனாக, நகையாளனாக

என பல வேடங்களை ஒருவனாக நடித்து

கனவுகளையும், நடப்புகளையும்

சேர்த்து குழப்பிக் கொண்டு

என்னுடையது உன்னுடையது என

எல்லை வழக்குகள் இட்டு

அழுக்கு உடம்பில் தெளிக்கப்படும்

வாசனை தெளிப்பான்கள்

பணப் பசியுடன் அலையும்

சட்டை பைகள்

உடல்கள் கூவி விற்கப்படும்

சிவப்பு தெருக்கள்

உழைப்பறை தவிர வேறு அறியாது

வாழும் வியர்வை தோல்கள்

உடல் எடையை குறைக்க ஓடும்

பணக்கார தொந்திகள்

வறுமைக்காக வேலைக்கு வந்த பெண்ணின்

உடலை பறிக்கும் மேலதிகாரியின் அதிகாரம்

தந்தை உடல் எரிவதற்கு முன்னமே

உருவான சொத்து சண்டைகள்

பிணத்தை ஈக்கள் முத்தமிட விட்டு விட்டு

வெட்டியானிடம் வாதம் செய்யும் அடுத்து போகும் பிணங்கள்

முறையற்ற காமத்தால் கலைக்கபட்ட

கருக்கள் மற்றும் கொட்ட பட்ட அனாதைகள்

அரசு அதிகாரியின் திமிர்

ஆள்வோரின் நேர்மையின்மை

பொதுமக்களின் மிதமிஞ்சிய சுயநலம்

அழுக்கு நதியில் மிதந்து போகும்

பழைய குழந்தை பொம்மை போல்

மனிதர்களின் நெகிழி வாழ்க்கை
                                                          - சிவதத்துவ சிவம்

Powered by Blogger