வாழ்க்கை - கற்றுக் கொள்ளவேண்டும்



கற்றுக் கொள்ளவேண்டும்

சோகங்களோடு சிரிக்கவும்
சிரிக்கும் போது சிந்திக்கவும்
தாழும் போதுதான் உயர்வையும்
உயரும் போதுதான் எளிமையையும்
அறிவை திறந்தது முதலே ஒழுக்கத்தையும்
ஒழுக்கத்தோடு வாழ சுத்தத்தையும்
புரியாத போதுதான் தேடலையும்
தேடிடும் போதே தேடியதை பதியவைக்கவும்
நினைத்த நல்ல செயல்களை நிகழ்தவும்
நிகழ்த்தியதை நிறைவாக்கவும்
இயலாத போதுதான் தன் பலவீனத்தையும்
பலவீனத்தை பலப்படுத்தவும்
பணத்தை புண்ணியமாக்கவும்
புண்ணியத்தை பெருக்கி கொள்ளவும்
உறவுகளோடு நன்கு உறவாடவும்
உறவாடும் போது விழிப்பையும்
அனுபவங்களை வைத்து வாழ்க்கையையும்
வாழ்க்கை முழுவதும் ஆண்டவனையும்
கற்றுக் கொள்ளவேண்டும்
-    சிவதத்துவ சிவம்
03/12/2003

ஆன்மீகம் - நீ பார்க்கிறாய்



நீ பார்க்கிறாய்


நீ பார்க்கிறாய்
நான் தவறு செய்கிறேன்
நீ பார்க்கிறாய்
நான் நேர்மையாகிறேன்
நீ பார்க்கிறாய்
செயல்படுகின்ற வெறுமையோடு
கவிதை அர்த்தப்படுவது காலத்தை பொருத்தது
கடவுள் அர்த்தப்படுவது ஞானத்தை பொருத்தது
நிலவு தெரியபடுவது நிலையை பொருத்தது
வாழ்க்கை தெரியபடுவது புரிதலையை பொருத்தது
என் ஒவ்வொரு செயலையும்
நீ பார்க்கிறாய்
நான் செயலற்று நிற்கும் போதும்
நீ பார்க்கிறாய்
விளைவுகளை நினைத்து கொண்டு
விலகி நிற்கிறேன்
விளைவுகளை கண்டு கொள்ளாமல்
மூழ்கி நிற்கிறேன்
நீ பார்க்கிறாய்
அறிவுரைக்கோ அதட்டலுக்கோ
நீ பார்க்கிறாய்
உன் மேல் பற்று இல்லாமல் விலகுகிறேன்
நீ பார்க்கிறாய்
ஓடி வந்து தழுவுகிறேன்
நீ பார்க்கிறாய்
குழந்தை இளமை முதுமை
வந்து வந்து போகிற வாழ்வில்
கோடை வசந்தம் குளிர்
வந்து வந்து போகிற வாழ்வில்
பொம்மலாட்டத்தில் பொம்மைக்கு சுய விருப்பமில்லை
மனதை நிலைபடுத்திக் கொள்ள கடவுளை தேடுவர்
அதை ஆத்மாவில் நிலைபடுத்திக் கொள்ள நானும் தேடுகிறேன்
நீ பார்க்கிறாய்
உதவுவதற்க்கோ உதறுவதற்க்கோ
-    சிவதத்துவ சிவம்
01/03/2005

மௌன காதலி



மௌன காதலி

பேசி பரிதவித்து – மனத்
தூசி துடைத்தெடுத்து – இறை
ஆசி அளிக்கவந்த – என்
நேசி மௌனத்தை – மனதால்
பூசி நின்றேன்

வம்பு வழங்கா வாக்கு மௌனம்
தெம்பு கொடுக்கும் தெளிவு மௌனம்
முன்பு பேசி சேர்த்த துயர் மௌனித்த
பின்பு பிறந்த பிள்ளை மனம் – நல்
பண்பு தரும் அன்பு மௌனம்

வாதம் செய்து வறண்ட நாக்கு
கேள்விகளிலே புரண்ட போக்கு
தேடி தந்ததென்ன எனக்கு
பூமி பந்தில் விழுந்ததெதற்கு
தூய இறையின் திருவடி தெடுவதற்கு
மௌனம் வேண்டும் இதை புரிவதற்கு
- சிவதத்துவ சிவம்
10/03/2004

ஓவியமும் ஓவியர்களும்



ஓவியமும் ஓவியர்களும்

தூரிகையின் தீண்டல்கள் ஓவியம்
வர்ணங்களை ஆங்காங்கே குடியமர்த்தினால் ஓவியம்
கருப்பு வெள்ளை கண்களை வைத்துக் கொண்டு
வண்ணங்களால் வருடுகிறீர்கள்
மரங்களையே அதிகம் வரைகிறீர்கள்
ஓ அது பெரிய தூரிகை என்றோ
துணியில்லாததையும் துணிந்து வரைந்து விடும்
பிரம்மனின் பக்கத்து வீட்டுக்காரர்கள்
தூரிகை கொண்டு ஆயிரம் ஆயிரம்
கவிதை எழுதும் கவிஞர்கள்
- சிவதத்துவ சிவம்

Powered by Blogger