வாழ்க்கை - தந்தைக்கு மகன் கடிதம்

முதியோர் இல்லத்தில் இருக்கும் தந்தைக்காக மகன் எழுதுவது போல் அமைந்துள்ள கவிதை
 தந்தைக்கு மகன் கடிதம்

அன்புள்ள அப்பாவிற்கு
உங்கள் மகன் எழுதிக் கொள்வது
இங்கு இருந்ததை விட நலமாக
இருப்பீர்கள் என நம்புகிறேன்
என் தாயின் நினைவை சுவைத்து கொண்டு

உங்கள் நினைவுகள் கூட இடைசொருகளாய்
வந்து போகும் என் வாழ்கையில்
நிமிடத்துளிகளைக் கூட நிறைவாகாமல்
நகர்த்து கிற என்வாழ்கையில்
என் மகன் தான்
என்னையும் உங்களையும்
அழுத்தமாக ஞாபகபடுத்தி விட்டான்

நானும் என் மனைவியும்
உங்கள் வாழ்கையின் மீது திணித்த
அலட்சியம்,நிராகரிப்பு,மரியாதையின்மையை
என் மகனும்
என் மீதும் பதியம் போட ஆரம்பித்துவிட்டான்

உலகம் மட்டும் சுருக்கி விடவில்லை
உறவுகளும் சுருக்கி விட்டது
என்று நிங்கள் அன்று சொன்ன வார்தைகள்
என் காதுகளுக்குள்ளே இப்போதேல்லாம்
கேட்டு கொண்டேயிருக்கிறது

பாரங்களையே உங்கள் மீது சுமத்திய மகன்
வரங்கள் வேண்டி கடிதம் எழுதுகிறேன்
உங்கள் அறை,படுக்கை,பயன்படுத்தும் பொருள்களை
வேறு யாருக்கும் விட்டு விட்டுச் செல்லாமல்
எனக்கே தர வேண்டுகிறேன்
நானும் பிற்காலத்தில் அங்கு தங்குவேன்
உங்களை போல்
உங்கள் நினைவை சுவைத்து கொண்டு
- சிவதத்துவ சிவம்

வேண்டத்தக்கது


வேண்டத்தக்கது

நல்கனவு மெய்பட வேண்டும்
காலம் களிப்புற வேண்டும்
தெளிந்த நினைவுகள் வேண்டும்
சேர்ந்த உறவுகள் வேண்டும்
சிதறிய முத்துகள் வேண்டும்
கொர்த்த கைகள் வேண்டும்
சாதிக்கு கல்லறைகள் வேண்டும்
பெண் கொல்லா கருவறைகள் வேண்டும்
நீதிக்கு விரைவு வேண்டும்
சாதிக்கும் வலிமை வேண்டும்
ஆராய்வில் முந்த வேண்டும்
வறுமை வழக்கெழிய வேண்டும்
நல்புதுமை மலர வேண்டும்
கல்லாமை இல்லா உலகு வேண்டும்
பொல்லாமை சொல்லா மனிதர் வேண்டும்
பொருட்கள் பொதுவேன்ற உணர்வு வேண்டும்
மாறும் உலகென்ற நினைவு வேண்டும்
-    சிவதத்துவ சிவம்

கண்ணீர் சந்நிதி

கண்ணீர் சந்நிதி

உணர்வுகள் வலிந்து இழுக்கப்படுகின்ற இடம்
எப்போதும் நிசப்தமான காற்றின் பயணம்
கடிகார முள்ளின் முடிவுறா காலம்
கண்ணீர் காய்ந்து போன கன்னம்
எந்த நகர்வும் செய்யாத சாமி சிலை
கார் மேகம் ஒரு துளியை கூட
சிந்தாமல் கலைந்து போகும்
நீண்ட பயணத்திற்கு பின் ஒரு நிறுத்தம்
எழுதிக் கொண்டிருக்கும் போதே இடப்பட்ட முற்றுப்புள்ளி
என் இறைவனுக்குள்ளும் தீண்டாமை

                                          - சிவதத்துவ சிவம்

நம்பிக்கை - நம்பிக்கையை தேடுகிறேன்


நம்பிக்கையை தேடுகிறேன்

அருவாய் உருவாய் என் மனதின் முன் என் நம்பிக்கை
இதயத்தின் புறத்தை தீண்டும் ரம்பமாக
மறுசமயமோ
மனதை தூக்கி மகிழ்ச்சி கடலில் வீசி எறியும்
வேண்டும் என்றபோது எனை தொடாமல் நிற்கும்
என்னை விட்டுவிடு என்ற போது கட்டி அணைக்கும்
என் உடம்புக்குள்ளேயே தனித்த உயிர் என் நம்பிக்கை
நம்பிக்கையின் விரலை பிடித்து என் காலம் நடக்கிறது
மறுசமயமோ என்னை துண்டித்துக்கொள்கிறது
நான் வளர்த்தெடுத்த என் நிலா
என் வானத்திலேயே வர மறுக்கிறது
என் நம்பிக்கையே உன்னை
வைத்து தான் நான் வாழ்ந்தேன்
வறட்சியில் நிற்பவன் வசந்தத்தை தானே தேடுவான்
நானும் உன்னையே தேடுகிறேன்
மரங்கள் தோறும் அலைந்து கூடுகட்ட கிளை
தேடும் பறவை போல்
நகரும் நொடிகள் தோறும்
நான் உன்னையே தேடுகிறேன்
- சிவதத்துவ சிவம்

Powered by Blogger